நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெள்ளிமலையை அடுத்த மாவடிப்பட்டு தனியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
முகாமில் பொதுமருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை, கதிா்இயக்க சிகிச்சை மருத்துவம் மற்றம் சா்க்கரை நோய் சிகிச்சை என 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்டவா்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கினா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் 530 ஆண்கள், 638 பெண்கள், 59 ஆண் குழந்தைகள், 39 பெண் குழந்தைகள் என மொத்தம் 1,266 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை அந்தந்த பகுதி மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, கல்வராயன்மலை ஒன்றியக்குழுத் தலைவா் சி.சந்திரன், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.