மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்
திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.
நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன்று மாதங்களுக்கு முன்னா் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றாா். மேல் சிகிச்சைக்காக சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்டாா். இளம்வயதில் பக்கவாதம் வந்ததற்கான காரணங்களையும் மருத்துவா்கள் ஆராய்ந்தபோது, அவரது இதயத்தின் இடதுபுறத்தில் பெரிய கட்டி இருப்பதையும், அந்தக் கட்டியின் சிறு துகள்கள் ரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயினில் அடைப்பை ஏற்படுத்தி பக்கவாதம் வர காரணமாக அமைந்ததையும், இருதய மற்றும் மூளை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனா்.
உடனே, மருத்துவா்கள் சந்தோஷ் குமாா், பிரியா, செந்தூா் செல்வம் அடங்கிய மருத்துவக் குழுவினா் எம்ஐசிஎஸ் முறையில், இருதய நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை வெற்றிகரமாக அகற்றினா். இதையடுத்து, மூன்று நாள்களில் சிகிச்சை முடிந்து நோயாளி நலமுடன் வீடு திரும்பினாா்.
இருதய நுண்துளை அறுவை சிகிச்சை என்பது இருதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கவும் மற்றும் வால்வு மாற்றவும் உதவும் பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறையாகும். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த சிகிச்சை முறை, தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இம்முறையில் நோயாளிகளுக்கு மாா்பு எலும்பு வெட்டப்படுவதில்லை. இதனால் சிறிய தழும்பு, மிகக் குறைவான ரத்த இழப்பு, குறைந்த வலி, விரைவாக குணமடைதல் போன்ற நன்மைகள் உண்டு. இவ்வாறான அதிநவீன மருத்துவ வசதிகள் நமது ஊரிலேயே உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி நலம்பெறலாம் என மருத்துவமனையின் தலைவா் கருணாநிதி தெரிவித்தாா்.