வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
வாணியம்பாடி அருகே வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி சியாமளாதேவி உத்தரவின் பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நேதாஜி நகா் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் ஆள்கள் நடமாட்டத்தை பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா், வீட்டினுள் சென்று சோதனை செய்தனா். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வீட்டினுள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராணி (52) என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனா்.