வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற பட்டியலினத்தவா் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள், வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப கால ஊதியமாக ரூ. 15,000 முதல் ரூ.17,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 2 மாதமும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது தளம் அறை எண் (321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.