"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?
ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்திப்பின் பின்னணியை விரிவாக விசாரித்தோம்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வற்புறுத்தி வருகிறார்கள்.
இதற்கென மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை வி.சி.க முன்னெடுக்கவுள்ளது. இதற்கிடையில் திடீரென முதல்வர் ஸ்டாலினை அவரது சித்தரஞ்சன் சாலை இல்லதில் வைத்து வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் சந்தித்து அரை மணி நேரம் விவாதித்திருக்கிறார்கள். இச்சந்திப்பின் மையக் கருவே ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பானதுதான் என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.
நம்மிடம் பேசிய வி.சி.க பிரமுகர்கள், "தி.மு.க ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கிறது. அப்படியான இக்கட்டான சூழலில் வி.சி.க முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் ஆளும் தரப்பு கண்டுகொள்வதில்லை் என்ற ஆதங்கம் எங்கள் தலைவர் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள்வரை இருந்துகொண்டே வருகிறது.
ஆனால் இம்முறை ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் தொடர்பான கோரிக்கையை விடுவதாக இல்லை என்ற நோக்கில்தான் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறோம். ஏற்கனவே திருநெல்வேலியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் முதல்வர் சந்திப்பும் நடந்தது. தனியாக சந்திப்பதைவிட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று கோரிக்கை வைத்தால் இன்னும் முக்கியத்துவம் கிடைக்கும் எனக் கருதி கூட்டாக சந்தித்தனர்" என்றனர்.

முதல்வர் - கூட்டணிக் கட்சித் தலைவர் சந்திப்பில் நடந்தவை குறித்து விசாரித்தோம். "தொடக்கத்தில் முதல்வரின் உடல்நலன் குறித்த விசாரித்த தலைவர்கள், சட்டென ஆணவப் படுகொலை டாப்பிக்கை தொடங்கியிருக்கிறார்கள். ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தின் அவசியத்தையும், அது நிறைவேற்றப்படாமல் இருப்பதால்வரும் அரசியல் நெருக்கடிகளையும் விளக்கியிருக்கிறார் திருமா...
கூட்டணிக் கட்சிகளை தலைவர்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்துவிட்டு பேச ஆரம்பித்த முதல்வர் "ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றுவது குறித்த பரிசீலனையில்தான் நாங்களும் இருக்கிறோம். அதற்கென சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம். பார்ப்போம்" என வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

"ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகள் விலக்கினால்தான் தமிழ்நாடு முதல்வருக்கு தெரியுமா.." என்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் அனலடிக்கத் தொடங்கியிருக்கிறது. நெருக்கடிகளுக்கு தி.மு.க அரசு செவி சாய்க்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்