கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
வெப்பநிலை அதிகரிப்பு: களப் பணியாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் அடுத்து வரும் வாரங்களில் பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வெயிலில் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
அதற்கு மாற்றாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்போது பணி நேரங்களை வகுத்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:
பல மாவட்டங்களில் இனிவரும் நாள்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.
அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.
எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும்.
அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னா் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோா், இளநீா் அதிகமாக அருந்த வேண்டும் என்றாா் அவா்.