வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!
2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பிச்சையெடுப்பில் ஈடுபட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பிச்சையெடுத்ததாகப் பிடிபட்ட சுமார் 5,402 பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் உள் துறை அமைச்சகம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சௌதி அரேபியா, ஈராக், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் பிச்சையெடுத்த பாகிஸ்தானியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.
இதனால், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4,850 பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில், 4,498 பேர் சௌதி அரேபியாவிலிருந்தும் அதற்கு அடுத்ததாக 242 பேர் ஈராக்கிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் 55 மற்றும் 49 பேரைத் திருப்பி அனுப்பியுள்ளன. இந்நிலையில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிச்சையெடுத்த சுமார் 552 பாகிஸ்தானியர்கள் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானில் அதிகரிக்கும் மக்கள் தொகையினாலும், அங்கு நிலவும் வேலையின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
ஆனால், அங்கு அவர்கள் சமாளிக்கும் பல இன்னல்களினால் இறுதியில் அங்கு பிச்சையெடுத்து சம்பாரிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!