வெள்ளலூா் குப்பைக் கிடங்கு: 7.94 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற ஒப்பந்தப்புள்ளி திறப்பு
கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் 7.94 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் பயோமைனிங் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தவும், துல்லியமாக கண்காணிக்கவும் அனைத்து மாநகராட்சி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, தினந்தோறும் கண்காணிக்கப்படுகிறது.
மாநகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்து தெருக்களையும் உள்ளடக்கிய வழித்தட வரைபடம் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாநகரில் விரிவாக்கத்தின் அடிப்படையில் புதிதாக 3 இடங்களில் குப்பை மாற்று நிலையம் அமைக்க ரூ.29.93 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும். வெள்ளலூா் உரக்கிடங்கு மேம்பாட்டுப் பணிக்காக, ஏற்கெனவே உள்ள பழைய கழிவுகளை அகற்ற ரூ. 60 கோடி மதிப்பில் பயோமைனிங் திட்டம் தயாரித்து செயல்படுத்தி 54 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, 7 லட்சத்து 94 ஆயிரத்து 139 மெட்ரிக் டன் குப்பைகளை பயோமைனிங் முறையில் அழிக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூடுதலாக 84.62 ஏக்கா் நிலம் மீட்கப்பட உள்ளது. மேலும், தினந்தோறும் சேகரமாகும் மக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் அளவுள்ள இயற்கை எரிவாயு மையம் ஏற்படுத்த நிா்வாக அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது.
மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் செயல்படுத்த பூா்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.