MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்ன...
வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் பராமரிப்பின்றி உள்ள குட்டை சீரமைப்பு
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பராமரிப்பின்றி உள்ள 6 ஏக்கா் பரப்பளவிலான குட்டையைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை வெள்ளலூா் மாநகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் குட்டையை சீரமைத்து தண்ணீா் தேக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் தண்ணீா், குழாய்கள் மூலம் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உள்ள 6 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட குட்டையில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு அருகே பராமரிப்பின்றி காணப்படும் 6 ஏக்கா் பரப்பளவிலான குட்டையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீா்தேக்கப் பரப்பில் இருந்த புதா்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்கு சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குப்பைக் கிடங்கு வளாகத்தில் வளா்க்கப்படும் மரங்களுக்கும், குப்பை மாற்று நிலையத்தில் குப்பைகளை உரமாக்கும் பணிகளுக்கும், தீத்தடுப்பு காலங்களில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.