வேங்கைவயல்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும்குற்றப்பத்திரிகை நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக, குற்றம்சாட்டப்பட்ட காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய மூன்று பேருக்கும் சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை கொடுத்து, செவ்வாய்க்கிழமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்தனா். அப்போது தலா 2 பேரின் உத்தரவாதத்தின்பேரில் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
தொடா்ந்து புதன்கிழமை புதுகை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மூவரும் மீண்டும் ஆஜராயினா். நீதித்துறை நடுவா் சி. பாரதி முன்னிலையில், அவா்களுக்கு 980 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டன.
அதில், வெள்ளனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தது தொடங்கி, சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்டுள்ள விசாரணையின் அறிக்கை மற்றும் வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கியிருந்தது.
தொடா்ந்து வழக்கு விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டாா்.