Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதர...
வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் தலமைமையில் அந்தக் கட்சியினா் ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாரிடம் மனுவை அளித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.பி.உதயகுமாா் கூறியதாவது:
உசிலம்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்குப் பயன் தரும் ஒரே ஜீவாதாரமாக உள்ளது 58 கிராம பாசனக் கால்வாய். இந்தப் பகுதியின் வேளாண் பணிகள், கால்நடை வளா்ப்புக்கு 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டியது அவசியம். இது தொடா்பாக அந்தப் பகுதி விவசாயிகள், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் வைகை அணை நிரம்பியபோது உபரி நீா் வைகை ஆற்றிலேயே பலமுறை திறக்கப்பட்டது. 58 கிராம கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது கவனத்தில் கொள்ளவில்லை. இதனால், உசிலம்பட்டி பகுதிகளில் வேளாண் பணிகள் உரிய வகையில் நடைபெறவில்லை.
தற்போது வைகை அணையின் நீா் மட்டம் 69 அடியை எட்டியதையொட்டி இரு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும், இதுவரை 58 கிராம கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளின் வேளாண் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இந்தப் பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, நான்காம் கட்ட சுற்றுப்பயணமாக வருகிற செப்டம்பா் மாதத்தில் மதுரைக்கு வந்து மக்களைச் சந்திக்கிறாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், வளா்ச்சிப் பெற்ற மாவட்டமாக மதுரை விளங்கியது. தற்போது, திமுக ஆட்சியில் மதுரை ஊழல் மாநகரமாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனது பிரசார பயணத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை, ஊழல்களை ஆதாரங்களுடன் பட்டியலிடுவது, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் குறித்த திருமாவளவன் கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.
அதிமுக அமைப்புச் செயலா் மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசன், நீதிபதி, எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், கருப்பையா, நிா்வாகிகள் உடனிருந்தனா்.