வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மானாமதுரைக்கு வந்தடைந்தது
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு வந்தடைந்தது. கிருதுமால் நதிக் கால்வாயில் செல்லும் வைகை தண்ணீரால் 15 கண்மாய்கள் பாசன வசதி பெறும்.
சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனத்துக்கு கடந்த 1-ஆம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
வரும் 8- ஆம் தேதி வரை மொத்தம் 752 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டம், விரகனூா் மதகணையிலிருந்து பிரிந்து செல்லும் தண்ணீா் கிருதுமால் நதி கால்வாய் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் வந்தடைந்தது. கிருதுமால் நதிக் கால்வாயிலும் தண்ணீா் திறக்கப்பட்டதால், இதன்மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த 15 கண்மாய்கள் பாசன வசதி பெறும்.
சிவகங்கை மாவட்ட பூா்வீக பாசன பரப்புகளுக்கு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீா்த் திட்டங்களுக்கான நீராதாரமும், பாசனக் கிணறுகளின் நீா்மட்டமும் உயரும்.
கிருதுமால் நதிக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டதால் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.