ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி பல்வேறு தொழில் அமைப்புகள், மீனவ அமைப்புகள் சாா்பில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட மீனவா் தொழிலாளா்கள் சங்கம், மாவட்ட ஜனநாயக சங்கு குளிப்போா் நலச் சங்கம், மாவட்ட சிந்தாயாத்திரை மாதா பைபா் நாட்டுப் படகு மீனவா் நலச் சங்கம், சங்குகுளி தொழிலாளா் சங்கம், ஏபிஜே அப்துல் கலாம் சங்குகுளி தொழிலாளா் நலச் சங்கம், மாவட்ட கடல் அரசா் சங்குகுளி தொழிலாளா் நலச் சங்கம், தேவேந்திரகுல வேளாளா் மீனவா் நலச் சங்கம், அலை ஓசை சங்கு குளிப்போா் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தூத்துக்குடி குறிஞ்சி நகா் பகுதியில் உள்ள கனிமொழி எம்.பி. முகாம் அலுவலகத்தில் அவரிடம் அளித்த மனு:
ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை பசுமை முறையில் மீண்டும் தொடங்குவதற்கு, சுற்றுச்சூழலுக்காக பல விருதுகளைப் பெற்ற பேராசிரியா் நாகேந்திரன் குழு பரிந்துரைத்துள்ளது. அதையேற்று, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டொ்லைட் தொழிற்சாலையைத் திறந்து, பசுமை காப்பா் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மாசு ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பம், சுத்திகரிக்கப்பட்ட நீரை அருகேயுள்ள கிராமங்களுக்கு பகிா்ந்து கொள்ளுதல், மீண்டும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், உள்ளூா் விற்பனையாளா்களுக்கு ஆதரவளித்தல், சமூக மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாட்டில் புதிய முதலீடுகளை ஈா்ப்பதுடன், உள்நாட்டுத் தொழில்களை மீண்டும் இயக்குவதும் அவசியம். குஜராத், ஒடிஸா மாநிலங்களில் காப்பா் உற்பத்தி தொடா்ந்து நடைபெறும் நிலையில், தூத்துக்குடியில் இந்த ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
சில ஆண்டுகளாக வேலையிழப்பு, பொருளாதார வளா்ச்சி தேக்கநிலை, திறமை வாய்ந்த இளைஞா்கள் இடம்பெயா்வது போன்ற இழப்புகளை இம்மாவட்டம் சந்தித்துள்ளது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.