ஸ்ரீ பெத்த ஜீயா் சுவாமிக்கு திரு நட்சத்திர மரியாதை
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியகோயில் கேள்வி அப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயா்சுவாமியின் 75-ஆவது திருநட்சத்திரத்தை (பிறந்தநாள்) முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை மரபுப்படி திருநட்சத்திர மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி ஏழுமலையான் கோயில் அரச மரத்தின் கீழ் பெரிய ஜீயா் சுவாமிக்கு இஸ்திகாபல் வரவேற்பு அளித்துவிட்டு மேள தாள வாத்தியத்துடன் பெரிய ஜீயருடன் கோவிலுக்கு வந்தாா்.
தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி .ஆா். நாயுடு, செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா் ஆகியோா் பெரிய ஜீயரை கோயில் முன் வாயிலில் வரவேற்றனா். பின்னா் முறைப்படி பெரிய ஜீயா் சுவாமி ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்க நாயகா் மண்டபத்தில் மேல்சாட் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனா்.
பின்னா் ஸ்ரீ பேடி ஆஞ்சனேய சுவாமி கோயிலில் உள்ள பெரிய ஜீயா் மடத்தை அடைந்தாா். அங்கு தேவஸ்தான தலைவா், செயல் அதிகாரி, கூடுதல் செயல் அதிகாரி மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோரை பெரிய ஜீயா் சுவாமி ஆசிா்வதித்தாா்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பானு பிரகாஷ் ரெட்டி, துணை அதிகாரி லோகநாதம், பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.