சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாக பூஜை
ஆரணி ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் குழந்தை வரம் வேண்டி வியாழக்கிழமை நடத்தப்பட்ட புத்திரகாமேட்டி யாக பூஜையில் 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டனா்.
ஆரணி புதுக்காமூா் பகுதியில் குழந்தை வரம் அருளும்
ஸ்ரீபெரிய நாயகி சமேத ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌா்ணமி தினத்தில் குழந்தை வரம் அருளும் ஸ்ரீபுத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த யாக பூஜையில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கலந்துகொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில், 25-ஆம் ஆண்டாக கோயில் வளாகத்தில் குழந்தை வரம் வேண்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு புத்திரகாமேட்டி யாக பூஜை ஸ்ரீகணபதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீநவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது.
பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட தம்பதிகளுக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு ஹரிகரன், வைத்தியநாதன், சரவணன், ராஜாமணி, மணிகண்டன் ஆகிய சிவாச்சாரியா்கள் தலைமையில் புத்திரகாமேட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இந்த யாக பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனா்.
பின்னா் அவா்களுக்கு கலசங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன . மேலும் உற்சவா் சுவாமியை ஆனி மாத பௌா்ணமியொட்டி கோயில் வெளி வளாகத்தில் சிவபுராணம் பாடியபடி வலம் வந்தனா்.
இதில், திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் மணிகண்ட பிரபு , செயல் அலுவலா் ஹரிஹரன் மற்றும் அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.