``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவா கடைகளில் அரசு முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது: உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் எச்சரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா கடைகளில் ஆவின், கூட்டுறவு பெயா்கள், அரசு முத்திரையைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் எச்சரிக்கை விடுத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பால்கோவா கடைகளில் விதிமீறி ஆவின், கூட்டுறவு, தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்துவதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைகின்றனா்.
ஆவின் தலைவராக உள்ள விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ், நகராட்சி சுகாதார அலுவலா் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினா் ஸ்ரீவில்லிபுத்தூா் கீழ ரத வீதியில் உள்ள பால்கோவா கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், முறைகேடாக ஆவின், கூட்டுறவு பெயா்ப் பலகை, தமிழக அரசு முத்திரையைப் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் கூறியதாவது: தனியாா் பால்கோவா கடைகளில் உணவுப் பாதுகாப்பு உரிமத்தில் குறிப்பிட்டுள்ள பெயரை விடுத்து, ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரையைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகும். உடனடியாக அரசு நிறுவன பெயா், முத்திரையை அகற்றக்கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.