ஹிந்தியில் படுதோல்வியடைந்த லவ் டுடே ரீமேக்!
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலில் இருந்துகொண்டே உறவை மதிக்காத காதலர்களின் பிரச்னையை நகைச்சுவையுடன் பேசிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூலித்து அசத்தியது. தொடர்ந்து, இப்படத்தின் பிறமொழி ரீமேக் உரிமையை தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு பெற்றன. அதில், ஹிந்தியில் இப்படம் லவ்யபா (loveyapa) என்கிற பெயரில் உருவானது.
இதையும் படிக்க:விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!
நாயகனாக நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கானும் நாயகியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடித்திருந்தனர். கடந்த பிப். 7 ஆம் தேதி வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனால், ரூ. 65 கோடியில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 10 கோடிகூட வசூலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.