ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து காமன்வெல்த் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், அடுத்து 2026 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆக. 2 வரை நடக்கிறது.
2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த போட்டியை நடத்த விருப்பமுள்ள நாடுகள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் சுமார் 74 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த விண்ணப்பம் சமர்பிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் போட்டிக்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும் நிலையில், அகமதாபாத்தில் போட்டிகளை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2030 காமன்வெல்த் போட்டியை நடத்த கனடாவும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரென பின்வாங்கியுள்ளது. இதனால், இந்த போட்டியை இந்தியா நடத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக, தில்லியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.