அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம்
அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி(நாகை மாவட்டம்) வரையிலான 37 கி.மீ. ரயில்வே வழித்தடம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. மீட்டா் கேஜ் பாதையாக இருந்த இந்த தடத்தில் 1990-களில் பயணிகள் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, இந்த தடத்தில் 1999 முதல் நடைபெற்ற ரயில் பஸ் இயக்கமும் 2004 டிச.26- ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த தடம் ரூ.288 கோடியில் அகலப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு, 2023 ஏப் 7-ஆம் தேதி முதல் டீசல் எரிபொருளைக் கொண்டு இயங்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார ரயில் இயக்கம் பணிக்காக மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆய்வு ரயில் மின்சாரத்தில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்தப் பணியை தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.