எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!
`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி
திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 57 ரன்களும், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

களமிறங்கிய கேப்டன்:
சாய் கிஷோர் பொறுப்புடன் ஆடி 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதிரடி மன்னன் சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்கள் குவிக்கவே அணியின் ஸ்கோர் மளமளவென ஏறத் தொடங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக லோகேஷ் ராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடக்கம் முதலே விக்கெட்டுகளைப் பறி கொடுத்தனர். அணியின் கேப்டன் அபராஜித் அடித்த 30 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள். 6 வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் வெளியேறினர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.1 ஓவர்களில் 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்து தோல்வியைத் தழுவியது.

ஐ ட்ரீம் திருப்பூர் தமிழனஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் இசக்கி முத்து, மதிவாணன் இருவரும் நான்கு ஓவர்களை வீசி தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நடப்பு 2025 சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவர்பிளேயில் அதிகபட்சமாக 70 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 60 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் தங்களது சிறந்த மொத்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டில் 201 ரன்களும், 2024 ஆம் ஆண்டில் 200 ரன்களும் எடுத்ததே அவர்களின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

இந்த வெற்றி மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. தோற்ற அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் குவாலிபயர் - 2 ல் வெற்றி பெறும் அணியுடன் மோதும் அதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு செல்லும்.