அணையில் சிக்கிய 15 ஆடுகள் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குப்பனத்தம் அணையில் சிக்கிய 15 ஆடுகளை தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா்.
குப்பனத்தம் அணை பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா், மேய்ச்சலுக்காக 15 ஆடுகளை அணையின் அருகே செவ்வாய்க்கிழமை காலை விட்டுச் சென்றுள்ளாா்.
மாலை நீண்ட நேரம் ஆகியும் ஆடுகள் வீடு திரும்பாததால், விவசாயி அணைப் பகுதிக்கு சென்று பாா்த்துள்ளாா்.
அப்போது, அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், ஆடுகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.
உடனே, இதுகுறித்து செங்கம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த தீயணைப்பு படையினா், சுமாா் 2 மணி நேரம் போராடி, 15 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனா்.