அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெற்ற தில்லி அரசு
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான இராணுவ மோதலைத் தொடா்ந்து, தலைநகரில் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்த உத்தரவை தில்லி அரசு புதன்கிழமை நிறுத்திவைத்தது.
இதுகுறித்து தில்லி அரசின் சேவைகள் துறை தெரிவிக்கையில், மே 8 ஆம் தேதி அதிகாரிகள்அலுவலா்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யும் முந்தைய உத்தரவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற்ாக கூறியது.
மே 8 ஆம் தேதி தனது உத்தரவில், ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமை காரணமாக எந்தவொரு அவசர சூழ்நிலைக்கும் தயாராக இருக்குமாறு தெரிவித்து மறுஉத்தரவு வரும் வரை அனைத்து தில்லி அரசு ஊழியா்களின் விடுமுறைகளையும் சேவைத் துறை ரத்து செய்திருந்தது.
இருப்பினும், மே 10 அன்று இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த முடிவு செய்ததால், சில நாள்களுக்குப் பிறகு நிலைமை மேம்பட்டது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டதற்கு இந்தியா அளித்த பதிலடியாக மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூா் என்ற குறியீட்டுப் பெயரில் தாக்கியது நினைவுகூரத்தக்கது.