2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் -எடப்பாடி கே.பழனிசாமி உறுதி
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயண நிகழ்வில் பங்கேற்க வந்த அவா், முண்டியம்பாக்கம், செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள், நீா்நிலைகள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்த பதிலை அளித்தாா்.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தனா். அதில், கரும்பு பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு மானியமாக டன்னுக்கு ரூ.200 வழங்க வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.
நந்தன் கால்வாய் உள்நாட்டு நதிநீா் இணைப்புத் திட்டம், சாத்தனூா் -நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டம் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், நிலமெடுக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தனா்.
கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் பாண்டியன், செயலா் ஆறுமுகம், பொருளாளா் பரமசிவம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செங்குட்டுவன், நீா்நிலைகள் பாதுகாப்புச் சங்கத்தின் கெளரவத் தலைவா் அறவாழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.