இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் வீடு மற்றும் விராலிமலையில் உள்ள தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியாா் பள்ளியின் மின்னஞ்சலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. சேகா் என்ற பெயரில் வந்திருந்தது.
இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் பள்ளிக்கு வந்து மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலறிந்த பெற்றோா்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனா்.
அதே நேரத்தில் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் வீட்டிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். இரு இடங்களிலும் வெடிபொருள்கள் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.