இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; வெகு சிறப்பாக திருவிழா...
அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். அந்தத் திருவிழாவின் மிக முக்கியமான அம்சம், அங்கு நடைபெறும் குதிரை மற்றும் மாட்டுச் சந்தை ஆகும்.

இந்தச் சந்தை, 'இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய குதிரை மற்றும் மாட்டுச் சந்தை' எனப் பெயர் பெற்றது. இந்தச் சந்தையில் மார்வார், கத்தியவார், இங்கிலீஸ் பீட் என உயர்ரக குதிரைகள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்குக் குவிவது வழக்கம்.
இதில் குதிரைகளின் உயரம், நிறம் மற்றும் சுழிகளை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இங்குச் சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குதிரைகள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்காகச் சந்தைப்படுத்தப்படும்.
இறந்த 6 குதிரைகள்
வழக்கம் போல, இந்த வருடமும் ஆடி மாதத்தையொட்டி கோவில் திருவிழா துவங்கியது. இதனையொட்டி திருவிழாவிற்குச் சந்தைப்படுத்த குதிரைகள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்திறங்கின.
அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சைஜா என்ற குதிரையின் உரிமையாளரும், குதிரையின் பாதுகாவலர் பைரஸும் தங்களின் 24 குதிரைகளைச் சந்தைக்குக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அக்குதிரைகளில் 6 குதிரைகள் மர்மமான முறையில் இறந்தது குதிரையின் உரிமையாளரையும், ஊர் மக்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவு
இதுகுறித்து, அந்தியூர் வருவாய்த்துறை, மாவட்ட கால்நடைத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் பாஸ்கர், உதவி இயக்குநர் ராமசாமி ஆகியோர், தண்ணீர்பந்தல்பாளையம் அருகே அமைக்கப்பட்டிருந்த குதிரை சந்தையில், நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், இறந்து கிடந்த ஆறு குதிரைகளையும் பார்வையிட்டு, உரிமையாளர் சைஜாவிடம் விசாரித்தனர். இதையடுத்து, ஆறு குதிரைகளும் மீட்கப்பட்டு, கெட்டி சமுத்திரம் ஏரிப் பகுதியில், கால்நடை மருத்துவக்குழுவினால் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரதேப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும் எனக் கால்நடை மருத்துவக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து கிடைத்த பிரதேப் பரிசோதனை முடிவில், யூரியா கலந்த தண்ணீரைப் பருகியதே குதிரைகளின் இறப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குதிரைகள் அந்த நீரைப் பருகியது எப்படி?
நேற்று இரவு பக்கத்துத் தோட்டத்திலிருந்து குதிரைகள் குடிப்பற்காக தண்ணீர் எடுத்ததாகவும், அதை இறந்த 6 குதிரைகள் பருகியதாகவும் குதிரையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இது பற்றி தோட்ட உரிமையாளரிடம் விசாரித்த போது, தோட்டத்திற்குப் பாய்ச்ச தண்ணீரில் யூரியா கலந்து வைத்திருந்தாகக் கூறியுள்ளார்.
அப்போது குதிரையின் இறப்பிற்குக் காரணம் தோட்டத்து உரிமையாளர்தான் என்றும், குதிரையின் இறப்பிற்கு உரிமையாளரின் அலட்சியப்போக்குதான் காரணம் என்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், கோவில் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்த குதிரையின் இறப்பு அந்தப் பகுதி மக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த குதிரைகளின் மதிப்பு 9 லட்சம் என்றும் குதிரைகளின் இறப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றும் குதிரைகளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.