'நம்பவே முடியவில்லை...’ இன்ப அதிர்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!
அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் அந்தியூா் சந்தை வளாகத்தில் மழைநீா் தேங்கியதால், வியாபாரிகள் கடைகள் அமைக்க சிரமப்பட்டனா். சந்தைக்கு செல்லும் வழிகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.
இதனால், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்ததோடு, கனமழை கொட்டியது. இதனால், வாரச் சந்தை வளாகத்தில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கடை விரித்த வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய முடியாமல், பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு மூடி வைத்தனா். மழை நின்றபோதிலும் பொதுமக்களும் சந்தைக்குள் வந்து செல்ல சிரமப்பட்டனா். இதனால், வழக்கமாக நடைபெறும் வா்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.