இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.
வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 547.04 புள்ளிகள் உயர்ந்து 81,049.03 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்து 80,796.84 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 114.45 புள்ளிகள் உயர்ந்து 24,461.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
லஞ்ச விசாரணையில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி கௌதம் அதானியின் பிரதிநிதிகள் அமெரிக்க நிர்வாக அதிகாரிகளை சந்தித்ததாக வெளியான செய்திகளுக்கு பிறகு அதானி போர்ட்ஸ் 6.29 சதவிகிதம் உயர்ந்தது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட மற்ற அனைத்து அதானி குழும பங்குகளும் வெகுவாக உயர்ந்து முடிந்தன.
டாப் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸில் உள்ள பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், பவர் கிரிட், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், டைட்டன், இண்டஸ்இண்ட் பேங்க் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 7.57 சதவிகிதம் சரிந்து ரூ.4,933 கோடியாக உள்ளதையடுத்து அதன் பங்குகள் 4.57 சதவிகிதம் சரிந்து முடிந்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.34 சதவிகிதமாக சரிந்து ரூ.19,600 கோடியாக அறிவித்ததையடுத்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.21,384 கோடியாக இருந்தது. நிகர வட்டி வரம்புகள் குறைந்ததால் இந்த சரிவு ஏற்பட்டதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.2,769.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.
சாதகமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் வலுவான உள்நாட்டு அடிப்படைகளின் கலவையின் மத்தியில் கடந்த மூன்று மாதங்களில், முதல் முறையாக நிகர வாங்குபவர்களாக அந்நிய முதலீட்டாளர்கள் மாறியதால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர்கள் ரூ.4,223 கோடி அளவு பங்குகளை வாங்கியுள்ளனர்.
தென் கொரியா, ஜப்பான், சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமாயின.
அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கணிசமான உயர்வுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.45 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 60.40 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ஏப்ரல் மாதத்தில் இரும்புத்தாது உற்பத்தி 15% அதிகரிப்பு!