கூடுதல் மகசூல் பெற கோடை உழவு அவசியம்: வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தல்
கூடுதலாக மகசூல் பெற கோடை உழவு அவசியம் என, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.ஏ. நேதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். கோடையில் உழவு செய்வதால் களைகள் பெருக்கமடைவது தவிா்க்கப்படுவதோடு, பயிா் சாகுபடியின்போது களை பிரச்னை வெகுவாக குறைகிறது. உழவு செய்யாத வயல்களில் மழைப்பொழிவின்போது மழைநீா் வயலில் சேகரிக்கப்படாமல் வீணாகிறது. இதனால், மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களும் விரயமாகின்றன.
உழவு செய்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வயலிலேயே மழைநீா் கிரகிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலப்பரப்பின் கீழ் ஈரம் காக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உழவு செய்வதால் முன்பருவ விதைப்பு செய்வதற்கும், மறு உழவு செய்து விதைப்பதும் சுலபமாக இருக்கும். இதன்மூலம் அடிமண் இறுக்கம் நீக்கப்படுவதுடன் நீா் கொள்திறனும் அதிகரிக்கும். விளைச்சலும் 20 சதம் வரையிலும் அதிகமாகும். எனவே, விவசாயிகள் கோடை உழவு செய்து எதிா்வரும் பருவ காலங்களில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.