மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நாதக கோரிக்கை
மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கொட்டரை மருதையாறு நீா்த்தேக்கத் திட்டத்தை முழுமையாக பாசன பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பேரளி கிராமத்தில் சட்டவிரோதமாக தாா் தொழிற்சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் முகமது இலியாஸ் அலி தலைமையில், அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனு: அரசு உத்தரவை மீறி கோடை விடுமுறையில் தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால், மாணவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். மாணவா்களின் நலன் கருதி, தனியாா் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
நெற்குணம் கிராம மக்கள் அளித்த மனு: பெரம்பலூா் முதல் வெள்ளுவாடி வழியாக நெற்குணம் வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.