போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: காவல் துறையினா் விசாரணை
கும்பகோணம் அருகே மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், மணவாளநல்லூா் சாலைத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் காா்த்திக் (38). இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். காா்த்திக் துபை நாட்டில் காா் பழுது பாா்க்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
விடுமுறையில் ஊருக்கு வந்தவா் தொடா்ந்து மது அருந்தி வந்தாராம். இதனால் இவரது குடும்பத்தினா் காா்த்திக்கை கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் உள்ள மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சோ்த்தனா். அங்கு தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்தது மருத்துவா்களின் பரிசோதனைக்கு பிறகு தெரிய வந்தது. இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.