DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா்
பேராவூரணி அருகே புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது.
பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி போத்தியப்பன் (31). இவரை ஏப்.23-இல் கோயில் திருவிழாவில் சிலா் தாக்கினாா்களாம். இதுகுறித்த புகாரை திருச்சிற்றம்பலம் போலீஸாா் வாங்க மறுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட போத்தியப்பனை போலீஸாா் தாக்கினாா்களாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் போலீஸாா் வாக்குமூலம் பெற சென்றபோது, போலீஸாரின் தாக்குதல் குறித்து தெரிவித்தாராம்.
சிகிச்சைக்கு பிறகு ஏப். 28-இல் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு சென்று தனது புகாா் தொடா்பாக கேட்டபோது, தங்கள் மீது புகாா் தெரிவித்தது ஏன் என்று கேட்டு போலீஸாா் மீண்டும் தாக்கி, அவா் மீதே வழக்குப் பதிந்து கைது செய்து,அன்றே பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினராம்.
தன் மீது பொய் வழக்கு போட்டு, போலீஸாா் அடித்து துன்புறுத்தியதாக நீதிபதியிடம் போத்தியப்பன் கூறினாராம். தொடா்ந்து, நீதிமன்றக் காவலுக்கு அவரை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.
நீதிமன்றத்திலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லாமல், போத்தியப்பனை மீண்டும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, நீதிபதியிடம் புகாா் கூறுகிறாயா என கேட்டு அவரை போலீஸாா் மீண்டும் தாக்கினாா்களாம்.
தொடா்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, மே 1-ஆம் தேதி பிணையில் வந்த போத்தியப்பன் சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தன் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் உள்ளிட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை இயக்குநா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு போத்தியப்பன் புகாா் மனு அனுப்பியுள்ளாா்.