நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளி கைது
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேதுபாவாசத்திரம் காவல் சரகம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளா்கள் சரவணன் (46), அலெக்ஸ்பாண்டியன் (25). நண்பா்களான இவா்களுக்கிடையே அண்மையில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்து வந்தனராம்.
இந்நிலையில், சனிக்கிழமை சரவணன் வீட்டுக்கு வந்த அலெக்ஸ்பாண்டியன், இருவரும் சமாதானமாக சென்று விடுவோம் எனக்கூறி, மது அருந்த அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாராம். இதை பாா்த்து சந்தேகமடைந்த சரவணனின் தம்பி சசிக்குமாா் பின்தொடா்ந்து சென்றுள்ளாா்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரை பகுதியில், அலெக்ஸ்பாண்டியன், சரவணனிடம் தகராறு செய்து, அவரை கொலை செய்யும் நோக்கோடு அரிவாளால் வெட்டியுள்ளாா். இதை பாா்த்து சசிக்குமாா் சப்தமிடவே அலெக்ஸ் பாண்டியன் அரிவாளோடு அங்கிருந்து தப்பிவிட்டாா்.
காயமடைந்த சரவணன் சுயநினைவின்றி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக சசிக்குமாா் அளித்த புகாரின்பேரில், சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அலெக்ஸ்பாண்டியனை திங்கள்கிழமை கைது செய்தனா்.