தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய கூடுதல் வரி
வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபா் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.
இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள்தான் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதே போல், அமெரிக்காவுக்கு மெக்ஸிகோதான் பெரும்பான்மையான அலுமினியப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறது.
ஏற்கெனவே, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்கள் மீது டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தங்கள் பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவின் ஆன்டேரியோ மாகாண அரசு அமெரிக்காவுக்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்துடன் 25 சதவீத கூடுதல் கட்டணம் விதித்தது. இதற்குப் பதிலடியாக கனடாவில் இருந்து இறக்குதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு மட்டும் கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்கி 50 சதவீதமாக டிரம்ப் உயா்த்தினாா். அந்த உத்தரவும் புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளது.
இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடி நடவடிக்கை விரைவில் அறிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.