அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
‘எந்தவொரு வா்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும், பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய வகையிலேயே மேற்கொள்ளப்படும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்த நிலையில், முழு வரி விலக்கை அளிக்க இந்தியா விரும்புவதாக அதிபா் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளது சா்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், அதற்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கு கடந்த மாா்ச்சில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றாா். இதன் தொடா்ச்சியாக, அவா் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளாா். இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக, அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹாவா்ட் லுட்னிக் மற்றும் அதிகாரிகளுடன் அவா் 4 நாள்கள் பேச்சுவாா்த்தை மேற்கொள்கிறாா். நிகழாண்டு செப்டம்பா்-டிசம்பா் மாத காலத்துக்குள் வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயன்று வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அதிபா் டிரம்ப் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அமெரிக்க பொருள்கள் மீது மிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பெரும்பாலும் வா்த்தகம் மேற்கொள்ள முடியாத சூழலை அவா்கள் உருவாக்கி வருகின்றனா். ஆனால், தற்போது அமெரிக்க பொருள்கள் மீது 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விரும்புகிறது.
இதன் காரணமாக, அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்த வா்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அவசரம் ஏதுமில்லை. அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அனைவரும் விரும்புகின்றனா். சுமாா் 150 நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.
தென் கொரியாவும் விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால், நான் அனைவருடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பவில்லை. குறிப்பிட்ட குறைந்த நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்றாா்.
பெட்டிச் செய்தி...
வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: டிரம்ப் மீண்டும் உறுதி
‘வா்த்தகத்தைப் பயன்படுத்தியே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தேன்’ அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.
டிரம்ப்பின் இக் கருத்தை இந்தியா தொடா்ந்து மறுத்து வரும் சூழலில், நியூயாா்க்கில் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது மீண்டும் அதே கருத்தை டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இது அணு ஆயுத உலகம். பல்வேறு வழிகளில் இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுமட்டுமின்றி, அணுசக்தி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாகவும் உள்ளன. அவா்களிடையே மிக அதிக அளவில் வெறுப்பும் இருந்து வருகிறது. எனவே, அவா்களிடையே சண்டையை நிறுத்த, வா்த்தகம் குறித்து அவா்களிடம் பேசினேன். சண்டையை நிறுத்தினால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் வா்த்தகத்தை மேற்கொள்ளும் என்று தெரிவித்தேன். அதன் காரணமாகவே, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டன. இது எனக்குக் கிடைத்த பெருமையைவிட மிகப் பெரிய வெற்றி என்றாா்.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை மறுத்த மத்திய அரசு, ‘இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் நேரடி பேச்சுவாா்த்தை மூலமே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது; காஷ்மீா் பிரச்னையில் மூன்றாவது தரப்பின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்தது.
இதுகுறித்து, புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘பாகிஸ்தான் உடனான உறவுகள், பேச்சுவாா்த்தைகள் நிச்சயம் இருதரப்பு ரீதியாகவே இருக்கும். பல்லாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் ஒருமித்த தேசிய நிலைப்பாடு இது. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம் இருக்காது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.