ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்
அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது, வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தாா்.
அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சோ்த்ததாக அவா் மீதும், அவா் மனைவி பி.சுசீலா, மகனும் தற்போதைய பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினருமான பி.செந்தில்குமாா், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோா் மீதும் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு விடுவித்தது. இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்ததில், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை மீண்டும் நடத்தும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய 7 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
ஆவணங்கள் பறிமுதல்: இந்த சோதனை குறித்த தகவல்களை அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அமைச்சா் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியசாமி, அவரது மகன் பிரபு இயக்குநா்களாக உள்ள திண்டுக்கல் மாவட்டம்,
வத்தலக்குண்டு பகுதியில் உள்ள இருளப்பா மில்ஸ் இந்தியா நிறுவன ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த வளாகத்தில் வேறு சில காகித ஆலைகள் செயல்படுவது கண்டறியப்பட்டது.
சோதனையின்போது பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.