அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம்: சென்னையில் இன்று தொடக்கம்
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களைக் கட்டணமின்றி அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி வைக்கவுள்ளாா்.
ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு நிகழாண்டு 2 ஆயிரம் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்படுவா் என தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 60 முதல் 70 வயதுக்குள்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அரசு நிதியில் சென்னை, தஞ்சாவூா், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு 5 பயணத் திட்டங்களாக ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8, 15 ஆகிய தேதிகளில் அழைத்துச் செல்லப்படுவா்.
இதைச் செயல்படுத்தும் வகையில் முதல்கட்ட ஆன்மிகப் பயணத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திருவொற்றியூா் வடிவுடையம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.
இந்தக் குழுவினருக்கு திருவொற்றியூா் வடிவுடையம்மன், பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூா் கற்பகாம்பாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு தரிசனமும், மதிய உணவும் வழங்கப்படும்.