SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்
அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!
பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் அண்ணாமலை.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர் கூறுகையில்,
”காஷ்மீரில் மிகவும் துயரமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்று இருந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்,
நம்முடைய அரசு கொடுக்கும் பதிலடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மக்கள் ஆக்ரோஷமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும், அரசும் அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்,
இந்த விவகாரத்தில் அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற அன்றுகூட பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை பொறுத்தவரை இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும், அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள்தான் இருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக தாக்குதல் நடந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும். இதில் நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்,
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் காலம் காலமாக சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்புப் படை அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது பல நாள்கள் கழித்து அப்பாவி மக்கள்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது, தீவிரவாதம் முற்றிலும் வேரோடு அறுக்கப்பட வேண்டும். நிச்சயம் அது நடக்கும்.
இறந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் அரசு தெரிவிக்கும்.
நான் உள்துறை இணை அமைச்சராக ஆகவில்லை, நான் உங்களோடுதான் இருக்கிறேன்” இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.