அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி
புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு மூன்று நாட்கள் கல்வெட்டுப் பயிற்சி செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக்குப் பிறகு திருக்கோகா்ணம் பிரகதம்பாள் திருக்கோயிலில் கல்வெட்டுப் படியெடுத்தல் செய்முறை வழி விளக்கமளிப்பட்டது.
மதுரை அருங்காட்சியக காப்பாட்சியா் மருது பாண்டியன், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியா் (பொ) பக்கிரிசாமி, ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜெ. ராஜாமுகம்மது, தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.
பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஞானஜோதி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத்தலைவா் மு. காயத்ரி தேவி வாழ்த்தினாா். இணை பேராசிரியா் சி. நீலாவதி நன்றி கூறினாா்.