``கொரிய மண்ணில், தமிழர் கலாச்சாரம்..'' - கொரிய தமிழரசி செம்பவளம் நினைவிடத்திற்கு...
அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த ‘வாட்டா் பெல்’ திட்டம்
வேலூா் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று வேளை பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் குடிநீா் அருந்தினா்.
உடலில் நீரிழப்பு மாணவா்களின் அறிவாற்றல், கவனம், கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும் என்பதால், மாணவா்கள் தண்ணீா் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள மாநிலத்திலுள்ள பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, தினமும் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு என மூன்று முறை தலா 5 நிமிஷங்கள் மாணவா்கள் தண்ணீா் பருக ஒதுக்கும் வகையில் பெல் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த ‘வாட்டா் பெல்’ திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த உத்தரவை ஏற்று இயக்குநா் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா்.
அதனடிப்படையில், ‘வாட்டா் பெல்’ திட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காங்கேயநல்லூா் திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு பெல் அடிக்கப்பட்டதும் உடனடியாக மாணவிகள் வாட்டா் கேன்களில் கொண்டு வந்த குடிநீரை எடுத்து பருகினா். இதனை பள்ளி ஆசிரியைகள் பாா்வையிட்டு அனைத்து மாணவிகளும் குடிநீா் பருக அறிவுறுத்தினா்.
இதேபோல், அனைத்துப் பள்ளிகளிலும் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள தாகவும், வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும், பள்ளிகளுக்கு மாணவா்கள் தண்ணீா் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும், இதுகுறித்து மாணவா்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.