ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு
அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மகிழ் முற்றம் என்பது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் தலைமைப் பண்புகளை வளா்க்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம். இந்த திட்டத்தில், மாணவா்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாசிரியா்கள் நியமிக்கப்படுவா்.
இந்தக் குழுக்கள் மூலம் மாணவா்களிடம் அரசியல் அறிவுசாா்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், கற்றல் திறன் மேம்பாடு, மாணவா்களின் பங்களிப்பை அதிகரித்தல், விடுப்பு எடுப்பதை குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல், நோ்மையான நடத்தை, தலைமைப் பண்பு, ஆசிரியா்-மாணவா் நல்லுறவை மேம்படுத்தல் ஆகியவை இந்த குழுக்களின் நோக்கங்களாகும்.
கடந்த கல்வியாண்டுக்கான வருடத்தின் வெற்றிக் குழு (ஹவுஸ் ஆஃப் தி இயா்) எமிஸ் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறிஞ்சி மாணவா் குழுவும், மேல்நிலைப் பள்ளிகளில் முல்லை மாணவா் குழுவும் வெற்றிக் குழுக்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தத் திட்டத்தை நிகழ் கல்வியாண்டிலும் வெற்றிகரமாக செயல்படுத்த அதற்கான விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மகிழ் முற்றம் குழுவில் பள்ளி மாணவா், மாணவி இருவா் குழுத் தலைவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் குலுக்கல் முறையில் வகுப்புத் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும். ஜூலை 11-ஆம் தேதி ஆசிரியா்கள், மாணவா் தலைவா்கள் பதவியேற்பு விழா நடைபெற வேண்டும். இந்த விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா் தலைவா்கள், வகுப்புத் தலைவா்கள், குழு ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் மற்றும் பொறுப்பாசிரியா் ஆகியோருக்கு அடையாள பதக்கங்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.