மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிகளில் படிக்கும் மாணவிகள் ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் வகையில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு பள்ளியிலும் கராத்தே, சிலம்பம், டேக்குவாண்டா அல்லது ஜூடோ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலை பயிற்சியை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 186 அரசு நடுநிலைப் பள்ளிகள், 210 அரசு உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
இதற்காக பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும், வாரத்தில் இரண்டு நாள்கள் பள்ளி வகுப்புகள் முடிந்தபின் மாலையில் தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.