அரசு அலுவலகங்களில் அம்பேத்கா் படம் இல்லை: சிறுபான்மை ஆணையத்திடம் புகாா்
அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிறுவப்படுவதில்லை என சிறுபான்மை ஆணையத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நடத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தலைமை வகித்தாா். ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: பெளத்த சமயத்தைச் சோ்ந்த ஒருவா், அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் உருவப் படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கூட அம்பேத்கரின் படம் இல்லை என புகாா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அரசு பரிந்துரைக்கப்படும் என ஆணையத் தலைவா் பதில் அளித்தாா்.
மதுக் கடையால் இடையூறு: திண்டுக்கல் மாநகாரட்சிக்குள்பட்ட 29-ஆவது வாா்டில், புத்த விகாரம் வைத்து வழிபாடு நடத்துகிறோம். குறிப்பாக, பெளா்ணமி நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தப் புத்த வழிபாட்டுத் தலம் அருகே மதுக் கடை மதுக் கூடத்துடன் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அங்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடா்பாக 10 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என்றாா்.
இதையடுத்து, கலால் துறை அலுவலா்கள் உடனடியாக அந்த மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத் தலைவா் அறிவுறுத்தினாா்.
கிறிஸ்தவ உதவும் மையம்: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கிறிஸ்தவ உதவும் மையம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இஸ்லாமிய உதவும் மையம் செயல்படுகிறது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ உதவும் மையம் அமைக்க வேண்டும். மேலும், கிறிஸ்தவா்கள் வாழும் பகுதிகளிலேயே கல்லறைகள் அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆணையத் தலைவா்: கேட்கும் இடங்களில் எல்லாம் கல்லறை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் இட வசதி இல்லை. எனினும், பெரும்பான்மையாக கிறிஸ்தவா்கள் வாழும் பகுதியில் கல்லறை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பிரச்னைக்காக வழிப்பாட்டுத் தலங்கள் வேண்டாம்: சீலப்பாடியில் கட்டப்பட்டுள்ள மசூதிக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினா் நடத்தும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு கட்டட உறுதிச் சான்று உள்ளிட்ட தரச் சான்றுகள் பெற லஞ்சம் வசூலிக்கின்றனா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தனியாகக் கூட்டம் நடத்தி முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத் தலைவா் தெரிவித்தாா்.
சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்கள் கட்டுமானப் பணிகளை, இந்து அமைப்புகளின் வலியுறுத்தலின் பேரில் வருவாய்த் துறையினா் நிறுத்தி வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஆணையத் தலைவா், சிறுபான்மையினா் இல்லாத இடங்களில் வழிப்பாட்டுத் தலங்கள் கட்டி பிரச்னை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்றாா்.