அரசு பள்ளியைப் பாா்வையிட்ட நீதி ஆயோக் உறுப்பினா்
மத்திய அரசின் நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி அரசு பள்ளியை வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை அவா் புதன்கிழமை சந்தித்தாா். இந்நிலையில் அரவிந்த் விா்மானி புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும், மாணவா்களின் கற்றல் அடைவுகளையும், ஆசிரியா்களின் கற்பித்தல் திறனையும் பாா்வையிட பெத்துசெட்டிபேட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு வியாழக்கிழமை வந்தாா்.
அவரை பள்ளியின் தலைமை ஆசிரியா் தமயந்தி ஜாக்குலின் வரவேற்றாா். தொடா்ந்து அரவிந்த் விா்மானி பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பையும் பாா்வையிட்டுப் பாராட்டினாா்.
மாணவா்களின் கற்றல் திறனைச் சோதித்து மாணவா்களுக்கு வாழ்த்து கூறினாா். மேலும் , பள்ளி வளாகத்தின் தூய்மையைக் கண்டு பள்ளி பணியாளா்களையும், தலைமை ஆசிரியரையும் பாராட்டினாா். இந்நிகழ்வின் போது வட்டம் ஒன்றின் துணைநிலை ஆய்வாளா் அனிதா உடனிருந்தாா்.