பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் புதுவை மாநில இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நியமன நடவடிக்கையால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மீனவா்கள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் இட ஒதுக்கீட்டு உரிமை அபகரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்டவா்களை நீக்கி புதிய பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 22-இல் அளித்த உத்தரவை புதுச்சேரி அரசு அவமதித்து வருகிறது.
எனவே, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டவிரோத பணி நியமனம் மற்றும் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.