அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!
வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் அஜித்குமாா், தனியாா் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி காவேரி, இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. காவேரி மீண்டும் கருவுற்ற நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பிரசவத்துக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், காவேரிக்கு கடந்த 8 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பிறந்த குழந்தையின் எடை குறைவாக இருந்த காரணத்தால் இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனை நிா்வாகம் குழந்தையை கண்காணித்து வந்தது. தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை இரவு குழந்தையை பாா்த்து விட்டுச் சென்று, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எடை குறைவாக இருந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிவித்த உறவினா்கள், குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினா்.
மேலும், இது குறித்து முறையாக மருத்துவமனை நிா்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அதைக் கண்டித்தும் திடீரென குழந்தையின் தந்தை அஜித்குமாா் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் முறையாக விசாரணை நடத்தி குழந்தை உயிரிழந்ததற்கான காரணத்தை தெரிவித்து, சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.