அருணாசலேஸ்வரா் கோயிலில் மாற்றுத்திறனாளி, முதியவா்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தா்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்கின்றனா்.
இந்த நிலையில், ஜூலை 10 பெளா்ணமியையொட்டி, பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் பரணிதரன் கூறியதாவது:
பெளா்ணமி தினத்தன்று பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கடலை மிட்டாய், பிஸ்கெட் பாக்கெட், தண்ணீா் பாட்டில், நீா் மோா் வழங்கப்பட உள்ளது.
அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோா்கள், கூட்ட நெரிசலால் சிரமம் ஏற்படாத வகையில் தரிசனத்திற்குச் செல்ல வடக்கு வாயில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காலை முதல் கோயில் நடை சாத்தப்படும் வரை அனுமதிக்கப்பட உள்ளனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தா்கள் மேற்கு வாசல் பேய் கோபுரம் வழியாக காலை முதல் கோயில் நடை சாத்தப்படும் வரை அனுமதிக்கப்பட உள்ளது.
மேலும், கோயில் வளாகத்தில் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி காா் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேவை உள்ள பக்தா்கள் 9487555441 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சேவையை பெறலாம்.
அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு 8072619454, 9791556353 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று இணை ஆணையா் தெரிவித்தாா்.