அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
அரூரில் சிறு தானியங்கள் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் குழுக் கூட்டம் சங்க மூத்த தலைவா் சண்முகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சங்க துணை செயலாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய மாநாடுகளின் தீா்மானங்கள் குறித்து மாவட்டச் செயலா் சின்னசாமி பேசினாா். வட்டச் செயலா் ராசு வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் தொடா் மழைக்காலங்களில் வீணாகும் உபரிநீரை பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும்.
அரூரில் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலையும், சிறு தானியங்கள் கொள்முதல் நிலையமும் அமைக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 60ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.