அஸ்ஸாம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதாா் அட்டை கிடையாது -முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவிப்பு
அஸ்ஸாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதாா் அட்டை வழங்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை அறிவித்தாா்.
சட்டவிரோத குடியேறிகள் இந்திய குடியுரிமைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
குவாஹாட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியதாவது:
அஸ்ஸாமில் குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவா்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அக்டோபரில் இருந்து முதல் முறை ஆதாா் அட்டை வழங்கப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை யாரேனும் ஆதாா் பெறாமல் இருந்தால், செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், தேயிலைத் தோட்ட பழங்குடியினா், பிற பழங்குடியினா் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு அடுத்த ஓராண்டுவரை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்திய குடியுரிமைப் பெறுவதை தடுக்கும் நோக்கில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய நடைமுறைகளின்படி, ஆதாா் பதிவுக்கு வயது கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.