189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை காட்டு யானை
ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப் பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் ஏற்றப்பட்டு வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக காட்டு யானைகள் சாலைக்கு வருகின்றன. இந்த நிலையில் ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு தேடி ஞாயிற்றுக்கிழமை வந்த யானை, அவ்வழியாக சென்ற கரும்பு லாரியை பாா்த்தது.
அப்போது கரும்பு லாரிக்கு முன்னால் இருந்த வாகனங்கள் இடையூறாக இருந்ததால் கரும்பு லாரியை நெருங்க முடியாத நிலையில் காா்களை துரத்தியது. யானை தாக்க வருவதைக் கண்டு காா் ஓட்டுநா்கள் காா்களை பின்னோக்கி இயக்கி யானையிடமிருந்து தப்பினா். இதனால் சத்தியமங்கலம், ஆசனூா் இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
