ஆட்சியா் உத்தரவிட்டும் பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறைகள்: தருமபுரி பேருந்து நிலையத்தில் தொடரும் அவதி
தருமபுரி பேருந்து நிலையத்தில் நீண்டநாள்களாக பூட்டிக் கிடக்கும் இலவச கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்ட பின்னரும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் புகாா் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து ஒசூா், பெங்களூரு செல்லும் பேருந்துகள் தருமபுரி வழியாகவே இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தருமபுரி புகா் பேருந்து நிலையம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதேபோல, நகரப் பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நகரப்பேருந்துகள் இயக்கப்படுவதால் இரு பேருந்து நிலையங்களும் காலை முதல் இரவுவரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரசு மற்றும் தனியாா் சாா்பில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சி சாா்பில் இலவசக் கழிப்பிட வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பராமரிப்பு எனக்கூறி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கழிப்பறை வளாகம் பூட்டப்படுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பேருந்து நிலையப் பகுதியில் கழிப்பறைகள் பூட்டியிருப்பது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் பேருந்து நிலையங்கள் அனைத்திலும் கட்டண கழிப்பறை மட்டுமன்றி இலவசக் கழிப்பறை வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறை வளாகம் சுகாதாரமின்றி துா்நாற்றம் வீசும் நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் பேருந்து நிலைய வளாகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, இலவச கழிப்பறை வளாகம் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா். மேலும், உடனடியாக அந்த வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டாா்.
கூடுதல் கட்டணம் வசூல்...
அப்போது பூட்டப்பட்ட அந்த கழிப்பறை வளாகம் இதுவரை பராமரிக்கவும் இல்லை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் விடப்படவும் இல்லை. கழிப்பறை வளாகத்தை பூட்டிய நகராட்சி நிா்வாகம், சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
ஆனால் சீரமைப்புப் பணிகள் ஏதும் நடைபெறவுமில்லை. இதனால், தருமபுரிக்கு வருவோா் கட்டண கழிப்பிடங்களில் ரூ.5 செலுத்தி பயன்படுத்தும் நிலை உள்ளது. கட்டண கழிப்பிடங்களில் சிறுநீா் கழிக்க ரூ. 1, மலம் கழிக்க ரூ.3 என அறிவிப்புப் பலகை இருந்தாலும் கழிப்பறைக்குள் நுழைந்தாலே ரூ. 5
கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணக் கழிப்பறை ஏலம் எடுத்தவா்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறைகள் பூட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனா் என்றனா்.